காயலின் புகழைத் தக்கவைக்கக் கரம் கோப்போம்


அருளால், அன்பால் வையத்தை ஆக்கிக் காக்கும் அல்லாஹ்விற்கே புகழனைத்தும்! அல்ஹம்துலில்லாஹ்.

குறையில்லா நெறியீந்த, இறைத்தூதர் பெருமானார் (ஸல் ) அவர்கள் மீதும், வழி தொடர்ந்தோர், தொடர்வோர் மீதும் இறையோனின் நிறையருள் சூழ்க !

அன்பின் நேயர்களே ! அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று 2015 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 23 ஆம் நாள் . 2012 ஆம் ஆண்டு இதே நாளில்தான் நமது இணையதளம் ஊடக உலகில் தோற்றம் கண்டது.

நாங்கள்  திட்டமிட்டபடி, துவக்கம் முதல்  இதுவரை செய்திகளில் மட்டும் சீரிய  கவனம் செலுத்தினோம். அதன் மூலம்    நேயர்களின் நெஞ்சங்களில் நிலை  பெற்றதாகவே எண்ணுகிறோம்.


இனி வரும் காலங்களில், செய்திகளோடு மற்ற ஆக்கங்களை தருவதிலும் எங்கள் கவனம் விரியும் என்பதை அடக்கத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

தொழில்நுட்பத்தின் (Technology) துணை கொண்டு இந்த இணையத்தை முடக்கிட , இடைவெளியில்லாமல் தொடர்ந்து இடையூறு விளைவிக்கும் திருப்பணியை (?) சிலர் ஆற்றி வருகின்றனர்.

இவர்களின் எண்ணம் ஈடேறாமல் , காக்கும் கரங்களாக உதவிடும் எங்கள் இணைய தொழில் நுட்ப கலைஞர்களை (Technical Team) நன்றியுடன் நினைவு கூறுகிறோம்.

எங்கள் சேவையால் எரிச்சல் அடையும் சிலர் , வாய்த்திடும் வழிகளைப் பயன்படுத்தி ,கூசும் சொற்களால் குற்றம் சுமத்தும் போதும் , அவதூறு பரப்பும் போதும் அவைகளை அலட்சியப் படுத்துகிறோம்.

இது போன்ற உளவியல் தாக்குதல்களை எதிர்கொள்ள துணையாய் அமைவது , இணையம் குறித்து நேயர்கள் வழங்கும் பாராட்டுகளும், வாழ்த்துகளுமே ஆகும் . அவைகள் எங்கள் பணிகளுக்குரிய அங்கீகாரமாகும். அந்த தூய உள்ளங்களையும் நன்றியுடன் நினைவு கூறுகிறோம் .

எங்கள் இலட்சியப் பயணத்தில் இதுவரை எங்களுடன் பயணித்த நேயர் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி. இன்ஷா அல்லாஹ் , இனி தொடரும் பயணத்திலும் இணைந்திருங்கள் என  அன்புடன் வேண்டுகிறோம் . 

காயலின் புகழைத் தக்கவைக்க நாம் அனைவரும் கரம் கோப்போம். இறையருள் நம் அனைவர் மீதும் சூழ்க !