சாதனையின் திறவுகோல் உங்களிடமே
அன்பின் அலாவுதீன், சமூக ஆர்வலர் எழுத்தாளர்
கல்விக்கு கண் உதவும். கேள்விக்கு காது உதவும். கேள்வியால் தான் ஞானம் பெற முடியும். நம் உடலில் ஒன்பது வாசல்கள். அவற்றுள் இரண்டுக்குத்தான் கதவுகள் இல்லை. ஒன்று மூக்கு, மற்றொன்று காது.
மூக்கு உயிர்மூச்சின் பயணப்பாதை. அது எந்த நேரமும் திறந்தே இருக்கும். அதுபோல நல்ல கருத்துக்கள் எந்த நேரத்தில், எந்த இடத்தில் யாரிடமிருந்து எப்போது வரும் என்று எதிர்பார்க்க முடியாது. அதனால் காதுகளுக்கு கதவுகள் இல்லை. காதுகளின் மகிமை இப்போது புரிந்திருக்கும்.
இத்தகைய இனிய காதுகளைப் பெற்றிருக்கின்ற இளைஞர்களே..! உங்கள் காதுகளைக் கொஞ்சம் கொடுங்கள். சாதனையின் திறவுகோல் உங்களிடமே! எப்படி என சொல்கிறேன்.
நம்மில் பலர் நேரமே போகவில்லை என்கின்றனர். சிலர் நேரம் போதவில்லை என்கின்றனர். இன்னும் சிலர் நேரமே சரியில்லை என்கின்றனர்.
நேரத்தைக் கொன்று விடுவது கொலையல்ல, அது ஒரு தற்கொலை நேரத்தைத்தவிர வேறு எதுவும் நமக்குத் சொந்தமானதல்ல. அந்த நேரத்திலும் அதிகாலை மிகவும் வாழ்க்கைக்கு நல்ல நேரமாகும்.ஆனால், பலருக்கு சிரமமானது அதிகாலையில் தினமும் எழுந்திருப்பது தான்.
அந்த சோம்பல்க்கு நிறந்தர விடுமுறை கொடுத்து விடுங்கள். ஒரு நாளையின் உற்சாகம் அதிகாலையில் எழுந்திருப்பதில் தான் உள்ளது என்றால் மிகையில்லை!
டாக்டர் ப்ரட் ஸ்டட்மன் என்பவர் தான் உலகிலே முதலில் நடப்பதை உடற்பயிற்சியாக மேற்கொண்டார். உடல் உறுதிக்கும், அழகான தேக தோற்றத்திற்கும் நடைப்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது என்பது அந்த ஆய்வில் அவர் கண்டறிந்த உண்மை.
இன்றும் நடைமுறையில் எல்லா வயதினருக்கும் வாழ்வில் தேவையான ஒன்றானாலும் நன்றாகவே,அது நோய்களிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்ளும் முக்கிய கேடயமாக உதவி புரிகிறது.
காலையில் தினமும் நான்கு கிலோ மீட்டர் தூரம் நடப்பதன் மூலம் இளமையில் இருந்தே உடலில் சேரும் கொழுப்பு குறைவதுடன் சுகர், இரத்த அழுத்தம் எப்போதுமே அளவுக்கு அதிகமாக இல்லாமல் அது பார்த்துக் கொள்கிறது.
எப்போதும் இளமையாகவும், புத்துணர்ச்சியும் பெற நடைப்பயிற்சி உதவுகிறது . உடல் பலம் - ஆன்மபலம் எனும் இரண்டு பெரிய சக்திகள் இயற்க்கையாகவே கிடைக்கும் போது, எத்தனையோ சிறந்த சாதனைகளைச் செய்ய எரிசக்தியாக அது உருப் பெறுகிறது.
நன்றாக உடற்பயிற்சி செய்பவர்களிடம் இளமையும், திறமையும், வேலைத்திறனும் அதிகரிக்கின்றது என மருத்துவ ஆய்வுக் கருத்துக்கள் தெரிவிக்கின்றன.
உடல் நலம் உள்ளவர்களிடத்தில் தன்னம்பிக்கை இருக்கிறது, தன்மைபிக்கை உள்ளவர்களிடம் எல்லாம் சரியாக இருக்கிறது. உடலில் உற்சாகம் குறைந்து போவதற்கு வயசு மட்டும் ஒரு காரணமல்ல - மாறாக சரியான உடல்பயிற்ச்சி நடைமுறைபடுத்தாமல் இருப்பதுதான் மூலக்காரணம்...முதல் காரணம்...
கவலையில்லா வாழ்க்கை பள்ளி, கல்லூரி வாழ்க்கை தான். வாழ்வில் வசந்தகாலம் இங்குதான் தொடங்குகிறது. எண்ணங்கள் சிறகடித்து எங்கெங்கோ பறக்கும், புதுமைகளைக் காணும் பொழுதெல்லாம் மனது பட்டாம்பூச்சியாக படப்படக்கும், துடி துடிக்கும், ஆசைகள் அலைபாயும், குறும்புகள் கள்ளமில்லாமல் கொப்பளிக்கும்.
வகுப்பறை விநோதங்கள் பல நிகழ்வதுண்டு அதில் ஒன்றை மட்டும் இங்கே நினைவுபடுத்துகிறேன். வகுப்பாசிரியர் மாணவர்களிடம் இன்னும் ஒரிரு மாதத்தில் முழு ஆண்டு தேர்வு வரப்போகிறது. நாம் ஒரு புதிய இடத்திற்கு சுற்றுலா போகலாம், எங்கே போகலாம்? என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள் என்றார்.
ஒரு மாணவன் எழுந்து சார்! குற்றாலம் போகலாம் என்றான். பலரும் பார்த்தது என்றார்கள். இன்னொரு மாணவன் எழுந்து சார்! கன்னியாகுமாரி என்றான். அப்போதும் பலர் பார்த்தாச்சு என்றார்கள்.
ஒட்டுமொத்தமான ஒரு முடிவை எடுக்க முடியவில்லை. இறுதியாக ஒரு மாணவன் எழுந்து சார்! நம்ம ஊர் பொது நூலகத்துக்கு போகலாம், அங்குதான் சார் நம்ம யாருமே இதுவரை போனதில்லை என கூறினான்.
குறும்பான அந்த வார்த்தைகளில் வகுப்பறையே சிரிப்பலைகளால் குலுங்கியது என்றாலும், அந்த சிரிப்புக்குள் சிந்திக்கவும் பல செய்திகள் இருக்கின்றன .
மாணவர்களிடத்தில் இன்று மனிதர்களின் வரலாறுகளை படிக்கின்ற பழக்கம் மிக குறைவாக குறைந்துக்கொண்டே வருகிறது என்பதுதான் வேதனையான ஒன்று.
அனைத்தும் இருந்தும் அறிவு பெற காயல் நூலகத்திற்கு வருவோர் அதிகமில்லை. ஏனெனில், அணைத்துக் கொண்டிருப்பது, அழைத்துக் கொண்டிருப்பது , கைபேசியில் வாட்ஸ் அப் , முகநூலை அல்லவா..?
மனிதர்களைப் புத்தகங்கள் தான் புனிதர்களாக மாற்றுகிறது. அத்தகையப் புத்தகங்களில் புதைத்திருக்கின்ற புதையலைத் தேடி, தோண்டி மாணவர்களின் இளமைப் பருவம் செல்ல வேண்டும் என்பது தான் இன்றைய காலச்சுழலுக்கு தேவையான ஒன்றாக இருக்கிறது.
பலரை சாதனை புரிவதற்கும், சமூக மாற்றத்திற்கு துணை புரிவதற்கும் புத்தகங்கள் மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளன. செய்து வருகின்றன.
என் மனதுக்கு உகந்த நல் நூல்களை மட்டும் என்னிடம் கொடுத்து என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான் கவலைப் படாமல் சந்தோமாக வாழ்நாளை கழிப்பேன் என்கிறார் சிந்தனையாளர் மாஜினி .
நமதூர் மா(ணவிகள்)ணவர்கள், இளைஞர்கள் அன்றைய காலத்தை விட இன்று மார்க்க அறிவுக்கும், கல்விக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து தங்களின் பெயருக்கு முன், பின் பட்டங்கள் இட உழைத்து படித்தாலும்,
பொதுஅறிவு என்பது என்னமோ நூலகத்தில் தான் புதைந்து கிடக்கிறது. ஆனால் அங்கு முதியவர்களைத்தான் அதிகம் காணக் கிடைக்கிறது.
பெற்றோர்கள், ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை, மாணவர்களை கடமையுடன் நூலகத்தில் இணைத்துவிட்டு அவர்களுக்கு உலக அறிவு தாகத்தை ஏற்படுத்திட வேண்டும். அப்போது தான் அவர்கள் வல்லவர்களாகவும், நல்லவர்களாகவும் இளமையிலிருந்து வேரூன்ற முடியும்.
இன்றைய நமது எதிர்கால புதிய தலைமுறையை வழிநடத்த பிறந்த இளைஞர்கள் , ஊரில் இருசக்கர வாகனங்களை எப்படி ஒருவழிப்பாதையில் ஓட்டுவது, எந்த இடங்களில் முறையாக நிறுத்துவது, ஓட்டுனர் உரிமம், விபத்துக்கள் இன்றி இப்படி எண்ணற்ற ஒழுக்கத்திற்கு சொந்தக்காரர்களாக திகழ வேண்டும்.
அவ்வாறு திகழ்வதற்கு இன்னும் பல நல்ல அறிஞர்கள், சாதனையாளர்கள், நாட்டுத்தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் இவர்களின் வாழ்க்கை வரலாற்றை படிப்பதற்கு வழிவகை செய்ய வேண்டும்.
மேலும், நமது பிள்ளை செல்வங்கள் நாளை இவர்களைப் போல சாதனையாளர்களாக வளர்ந்து வர ஊன்று கோலாக , தூண்டு கோலாக பெற்றோர்கள் விளங்கிட வேண்டாமா ? வாழ்க்கை என்பதே வெற்றியை நோக்கிய பயணம்தானே!
நீ இந்த உலகத்திற்கு வெள்ளைத் தாளாகவே வருகிறாய் அதில் நீதான் உன்னை எழுதிக்கொள்ள வேண்டும் சிலர் இந்தத்தாளில் கிறுக்குகிறார்கள். சிலரோ படிக்கப்பட்டபின் குப்பைக்கூடையில் எறியப்படும் காகிதமாகிறார்கள். சிலரோ வெற்றுத்தாளாகவே இருந்து விடுகிறார்கள் இதில் நான் யார்? என்பதை நிரப்பிக்கொள்ள வேண்டியது உங்களது தேடலின் திறவுகோலில் தான் உள்ளது என்கிறார் கவிக்கோ அப்துல்ரகுமான்.
எப்பொழுதும் உங்களைச் சுற்றிலும் நல்லவர்கள், அறிவாளிகள், அரண்போல் சூழ்ந்திருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு இரும்புதான் இன்னொரு இரும்பைக் கூர்மையாக்கும், அதுபோல கூர்மையான அறிவுடையவர்கள் தான் மற்றவரை கூர்மையான அறிவுடையவராக உருவாக்க முடியும்.
பிரமிடின் தத்துவம் அனைவரும் அறிந்ததே! சாதாரணமாக பிரமிடின் அடிப்பாகம் அகலமாகவும் பின்பு படிப்படியாக குறுகி அதன் உச்சி ஒரு புள்ளியில் போய் முடியும்.
இலட்சிய கனவை நடைமுறைப்படுத்த இந்த பிரமிடை தலைகீழாக மாற்றிக் கொள்ள வேண்டும். உங்கள் இலட்சியக் கனவு பரந்து விரிந்த பிரமிடின் அடிப்பாகம் போன்றதாகும்.
அதை அடைய முயலும் போது முதலில் சிறு சிறு வெற்றிகள் கிடைக்கும். அந்த சிறு வெற்றிகள் வாழ்கையின் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும். இந்த தன்னம்பிக்கை தான் வலிந்து பெரிய வெற்றியை அடைய வழி வகுக்கும்.
ஒரு சிறு புள்ளியிலிருந்து தொடங்கி தலைகீழ் பிரமிடின் பரந்து விரிந்த வெற்றியை அடையலாம். அந்த பல வெற்றிகளே ஒன்றுசேர சாதனைக்கு வழுசேர்க்கும்.
நூறு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள், இந்த உலகத்தையே மாற்றிக் காட்டுகிறேன் என்றார் விவேகானந்தர் . இளைஞர்களிடம் உள்ள மகத்தான சக்தியைதான் இவரின் இந்த வைர வரிகள் நினைவு படுத்துக்கின்றன.
நம்பிக்கையுடன் உங்கள் பயணத்தை தொடர்ந்தால் சாதனை பக்கங்களில் சரித்திரமாக இடம் பெற இன்றே கனவு காணுங்கள்.
மாணவர்களே! இளைஞர்களே! உங்களிடம் ஒப்பற்ற சக்தி இருக்கிறது. அதைக் கொண்டு ஏதாவது உங்களுக்கு இடப்பட்ட துறையின் சாதனையை செய்யலாம். ஆனால்! பலர் தங்களின் சக்தியை சிறிது சிறிதாக பலவழிகளில் செலவிடுக்கின்றனர் இதை தவிர்க்க வேண்டும்.
உங்களிடம் உள்ள ஆற்றலை ஒருமுகப்படுத்தி ஒரே வழியில் பயனுள்ளதாக பயன்படுத்திப் பாருங்கள். அப்போது தெரியும். உங்கள் திறமையின் வெளிப்பாடு, வெற்றியாக மாறி இலக்கை எளிதில் தொட்டு விட முடியும் . உங்களால் எட்டிப்பிடிக்க முடியாத உயரங்கள் என்று எதுவுமில்லை. அந்த உயரத்தை அடைவதற்கு வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை எல்லாம் உங்களுக்குள்ளேதான் இருக்கிறது.
எழுந்து நில்! தைரியமாக இரு! வலிமையுடன் முன்னேறு! பொறுப்புகள் முழுவதையும் உன் தோள் மீது சுமர்ந்துக் கொள்! உனது இலக்கை நீயே நிர்ணயத்துக் கொள்! உனக்கு தேவையான சகல உதவிகளும் உன்னிடமே புதைந்து கிடப்பதை உணர்ந்து கொள்!
நீ கருவிலேயே உன்னுடன் போட்டி போட்ட பல கோடி சகோதரர்கள், சகோதரிகளை ஜெயித்தே ஜனித்தவன் என்பதை மறந்துவிடாதே!
நீ பிறக்கும் போதே உனக்குரிய நற்பண்புகள் உனக்குள்ளே விதையாய் ஒளிந்திருக்கிறது . அதைகண்டுபிடி! தண்ணீர் இடு! உரமிடு! பிறருக்கு நிழல் தரும் ஆலமரமாக வளர்ந்து, உயர்ந்து நிற்பாய் .
இளமை மிக அற்புதமானது, வாழ்வில் ஒருமுறை தான் வரும் மாபெரும் சாதனைகள் அனைத்தும் இளமையில் சாதித்ததுதான் என்பார் அறிஞர் பெஞ்சமின் பிஸ்ரேலி.
விதைக்குள் விருட்சம் இருப்பதைப் போல அந்த ஆற்றல் வெளி வந்தால் பயனடையப் போவது நீங்கள் மட்டும் என்று எண்ணாதீர்கள்! உங்களைச் சுற்றியுள்ள இந்த சமூகமும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்!!
ஒரு குறிக்கோளை அடைவதில் ஒரு இளைஞனுக்கு உற்சாகம் இருக்குமானால் அது எவ்வளவு பெரிய கடினமான விசயமானாலும் அவனால் சாதித்து விட முடியும் என்பார் சார்லஸ் லாப்!
அமெரிக்காவின் தலைசிறந்த ஜனாதிபதியாகத் திகழ்ந்தவர் ஜான் கென்னடி, சில பார்வையாளர்களை நாள்தோறும் சந்திப்பது அவரது பணிகளில் ஒன்று. அதுபோல ஒரு நாள் வெள்ளை மாளிகையில் மாணவர்களுடன் பேசிக் கொண்டிருந்தார்.
ஒரு மாணவரிடம் உன் எதிர்கால லட்சியம் என்ன? என்று கேட்டார். அதற்கு அந்த மாணவச் சிறுவன் இன்று நீங்கள் அமர்ந்திருக்கும் இதே மாளிகையில் இதே நாற்காலியில் நான் உட்கார வேண்டும்! இதுதான் அந்த சிறுவனின் பதில்.
கென்னடியின் விழிகள் வியப்பால் விரிந்தன, உதடுகள் மொட்டுகளாக மலர்ந்து விரிந்தன. உனக்கு என் பிராத்தனையும், நல்வாழ்த்துகளும் என்று சொல்லி விடைப்பெற்றார்.
காலம் கனிந்தது. கூடவே பதிலும் சொல்லியது. அதே சிறுவன், அதே இடத்தில், அதே நாற்காலியில் வந்து அமர்ந்தார். அது வேறு யாருமல்ல! உலக புகழ் பெற்ற முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பில் கிளிண்டன் தான்.
இன்று தனது துணைவியார் ஹிலாரி கிளிண்டன் அதிபர் தேர்தலில் நிறுத்தப்பட்டுள்ளார் என்ற வரலாறு உங்களின் சிந்தனைக்கு நல்ல பாடம் புகட்டவில்லையா?
இலக்கை நோக்கிய பயணத்தில் இடையூறுகள் வரலாம். ஒருபோதும் அதைப் பொருடபடுத்தாதீர்கள். இளமையில் திறமை என்பது ரத்தத்தில் கலந்து விட்ட ஒன்றாக இருக்க வேண்டும். இந்த திறமையை அடிப்படைத்திறமை, செயல்பாட்டுத்திறமை என இருவகைப்படுத்தலாம்.
அடிப்படைத் திறமை என்பது பாடம் படிப்பது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது, மற்றவர்கள் எப்படிப் பேசுகிறார்கள். நாம் எப்படி பேசுவது போன்றவை . செயல்பாட்டுத் திறமை என்பது, காலம் தவறாமை, புதிய தொழில் நுட்பங்கள் எவ்வாறு வளர்ந்துள்ளன அவற்றை எவ்வாறு பயன்படுத்தி வெற்றிப் பெறுவது என்பதை அறிந்து கொள்வது,
ஆற்றல் எனும் திறவுகோல் மற்றும் போர்க் குணம் இவைகள் மூலம் இலக்கை நோக்கி பயணித்து, சாதிக்க துடிக்கும் இளைஞர்களே , வரலாற்றுப் பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்ளும் இளைஞர்களாக மலர்வார்கள் என்பது தான் நிதர்சனம்.
நம்பிக்கை என்பது புயற்காற்றில் துவண்டு விடும் மெல்லிய மலரல்ல, அது அடிபெயரா இமயத்தைப் போன்றது. முன்னேறுபவர்களின் மூச்சுக்காற்று நம்பிக்கை தான். வெற்றியடைவதற்கு அவசியமான குணங்களில் தலை சிறந்த நற்குணம், நம்பிக்கை தான். உங்களுக்கு இருக்கின்ற மூன்றாம் கையைப் புரிந்துக் கொண்டீர்களா?
நம்பிக்கையோடு புறப்படுங்கள். இதோ! ஒரு புதிய விடியல் உங்களை வரவேற்கக் காத்திருக்கிறது. யுக்தியோடு திறந்துக் கொள்ளுங்கள் சாதனையின் கதவுகளை.
வாய்ப்பு என்பது எப்பொழுதும் வருவதல்ல , எப்பொழுதாவது வருவதற்குப் பெயர் தான் வாய்ப்பு! அப்படி வரும்பொழுது அதைப் பயன்படுத்திக் கொள்ள தெரிந்தவர்களே வாழ்க்கைப் பயணத்தில் வெற்றியடைகின்றார்கள்.
நம்முடைய பெயர் , ஊராட்சி, நகராட்சியின் பிறப்பு, இறப்பு பதிவேட்டில் மட்டுமே எழுதப்பட்டிருக்க வேண்டுமா? அல்லது உலக மக்களின் இதயங்களிலும், வரலாற்றுக் கல்வெட்டிலும் பதியப்பட்டிருக்க வேண்டுமா? என்ற எண்ணத்தின் திறவுகோல் உங்களிடமே..!