மண்ணின் மைந்தர்கள் மண்ணை துறப்பது ஏன்
குழந்தை நல மருத்துவர் Dr. D. முஹம்மது கிஸார் M.B.B.S, D.C.H.
(இந்த கட்டுரையை நான் ஒரு டாக்டர் என்ற முறையில் இல்லாமல், காயலின் மண்ணின் மைந்தன் என்ற முறையில் எழுதுகிறேன். எனவே வாசகர்கள் இந்த கட்டுரை முழுவதும் என்னை டாக்டராக எண்ணாமல், ஊரில் உள்ள பொது ஜனத்தில் ஒருவனாகவே பார்க்கவும்.--த முஹம்மது கிஸார் )
அஸ்ஸலாமு அலைக்கும் .
நமதூரான காயல்பட்டினத்தை பூர்வகுடியாக கொண்ட ஆங்கில மருத்துவர்கள், தற்சமயம் இந்தியாவிலும் , வெளிநாட்டிலும் சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இதில் விரல் விட்டும் என்னும் ஒரு சிலரே, நமதூரில் இருந்து மருத்துவ பணி செய்து வருகிறார்கள்.நமதூர் மருத்துவர்கள், அனேகமாக எல்லா துறையில் இருந்தும் , இன்னும் நமதூர் மக்கள், சில அவசரத்திற்கு கூட நமதூரில் மருத்துவ சேவை பெறமுடியாமல் அலைவதை காணமுடிகிறது.
நமதூர் மக்கள் பலர் இணைய தளங்களிலும் இன்னும் பல ஊடகங்களிலும் இதைப்பற்றி குறையாக எழுதி வருவதை பார்க்கிறோம். இந்த நிலைக்கு காரணம் என்ன என்று அலசு முன், ஒரு சில நிதர்சமான உண்மைகளை காண்போம்.
பொதுவாக ஒரு மருத்துவர், குறைந்த பட்சம் ஒரு சிறப்பு மருத்துவ துறையில் படித்து முடித்து வெளிவர குறைந்த பட்சம் 8 முதல் பத்து ஆண்டுகள் ஆகிறது,
இதில் supers specialty என்றால் அனேகமாக பத்து ஆண்டு களுக்கு மேல் ஆகிறது. இப்படி பட்டம் முடித்து விட்டு வெளி வரும் சமயம், தன்னுடன் பள்ளியில் படித்த சக தோழர்கள் அநேகமாக ,
கைநிறைய சம்பாதித்து விட்டு ஓரளவுக்கு வாழ்க்கையில் செட்டில் ஆகி விட்டதை பார்ர்க்கும் போது, அந்த இளம் மருத்துவர்கள், ஏனோ தாங்கள் சமூகத்தில் பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி உள்ளதை போல் தாழ்வு மனப்பான்மை கொள்கிறார்கள். படித்து முடிக்கும் வரை, தாங்கள் இதை பற்றி யோசிப்பதே கிடையாது.
ஏனெனில் பொதுவாக மருத்துவ படிப்பு அதிக உழைப்பு, stress உள்ளது என்பதால், மருத்துவ கல்லூரிகளில் படிக்கும் வரை தாங்கள், தேர்வில் வெற்றிபெற்று வெளிவருவது ஒன்றில் தான் கருத்தாக இருப்பார்கள்.
இதற்காக பலர், கடன் மற்றும் உதவித்தொகை பெற்றே படித்து வருவார்கள். படித்து முடித்தவுடன், அந்த கடன்களை திரும்ப செலுத்தும் ஒரு அழுத்தமும் வந்து விடும்.
படித்து முடித்து வந்து வெளியுலகை பார்க்கும் போது தாங்கள் ஏனோ உலக வாழ்வில் அதிகம் பின்தங்கி உள்ளதாக எண்ணி வருந்துவார்கள். இது அவர்களை விரைவில் சம்பாதிக்க தூண்டும். இதில் தப்பு இல்லை. இது தான் மனித இயல்பு.
பொதுவாக மருத்துவர்கள், மிக எளிமையான வாழ்க்கையை பின்பற்றினால், இந்த சமூகம் அவர்களை கிண்டல் செய்வதை பார்க்கிறோம்.
உதாரணம் ஒரு டாக்டர் டவுன் பஸ்சில் பயணம் செய்தால் 'என்னடா இவன் டாக்டராக இருந்து கொண்டு டவுன் பஸ்ஸில் செல்கிறான்' என்பது போன்ற கமெண்ட்.
டாக்டர் பொண்டாட்டி கழுத்தில் ஒரு நூல் போன்ற செயின் தானே உள்ளது போன்ற விமர்சனங்களும், பொதுவாக மக்கள், டாக்டர் என்றால் அவர் குறைந்த பட்சம் ஒரு கார், சிறு பங்களா , பொண்டாட்டி கழுத்திலும் கையிலும் தங்கம் மின்னல் என்று தான் எதிர்பார்கிறார்கள்.
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து, சமூகம் எதிர்பார்க்கும் வாழ்க்கையை அமைத்து கொள்ள ஒரு சில மருத்துவர்கள் , கடன் கூட பெற்று விடுகிறார்கள்.
ஏற்கனவே, மிக தாமதமான சம்பாத்தியம், படித்த போது பெற்ற கடனை அடைக்கபடும் அவஸ்தை, மேலும் கடன் பெற்று அதன் மூலம் இன்ஸ்டால்மென்ட் தொகை கூடி போதல், போன்ற காரணங்கள் அவர்களை ஒரு வித அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது.
இதன் விளைவாக தங்கள் வருமானத்தை கூட்ட , உடனே சம்பாதிக்க தேர்ந்து எடுக்கும் வழிதான் வெளிநாடுஅல்லது நகர்புற மருத்துவ தொழில் சேவை போன்றவை.
இப்படி சொந்த மண்ணை விட்டு , சம்பாதிக்கும் ஒரே நோக்குடன் வேற இடங்களில் தொழில் செய்வது சரியா அல்லது தவறா என்ற , மருத்துவர்கள் பார்வையில் அது சரியே! பொது மக்கள் பார்வையில் அது சரியல்ல என்பதே!
ஆனால் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.. மருத்துவர்களும் மனிதர்களே! அவர்களுக்கும் ஆசை, ஆசாபாசம் எல்லாம் உண்டு.
கட்டாயம் ஊரில் தான் சேவை செய்ய வேண்டும் என்று நாம் எந்த அழுத்தமும் கொடுக்க இயலாது. ஏனெனில், எந்த மருத்த மாணவர்களையும் நமதூர் பொது அமைப்புகள் SPONSOR செய்ததாக, அறியவில்லை.
சரி மருத்துவர்கள் ஒட்டு மொத்ததினரும் ஊரை விட்டு விட்டு, வெளிவூரில் சென்று தொழில் செய்வதில் உள்ள MASS PSYCHOLOGY க்கு என்ன காரணம் என்று சற்று அலசுவோம்..
பலர் அப்படி இருக்கலாம். குறைந்தது பத்து சதவிகித டக்டர்களாவது ஏன் இங்கு இருப்பதில்லை. என்று ஆராயும் போது,
இதில் நமதூர் பொது மக்கள் ஊரில் உள்ள நமதூர் மருத்துவர்களை அணுகும் முறை, அவர்களின் சேவையை உபயோகபடுத்தும் முறை இதில் ஏதாவது தவறு இருக்கிறதா என்று நாம் சற்று யோசிக்க வேண்டும்.
ஏனெனில், படித்து முடித்து விட்டு நமதூரில் ஆரம்பகாலங்களில் தொழில் செய்த பல நமதூர் டாக்டர்கள், நாளடைவில் தங்கள் கிளினிக் இருக்கும் ஊரை மாற்ற காரணம் (ஒரு சிலர் தவிர) என்று யோசிக்கும் போது,
அவர்களின் கசப்பான அனுபவங்கள் தான் அவர்களை ஊரை மாற்ற செய்ததா அல்லது அவர்களின் கசப்பான அனுபவங்களை கேள்வியுற்ற மற்ற இளம் மருத்துவர்களிடம் ஊரில் தாமும் பணி செய்தால் இது போல கசப்பான அனுபவம் வந்து விடுமோ என்ற பயம் காரணமாகவோ இருக்கலாம்.
எனக்கு ஞாபகம் தெரிந்து பல டாக்டர்கள் ஆரம்ப காலங்களில் நமதூரில் பணிபுரிந்து விட்டு தான், பின்னர் மற்ற ஊர்களுக்கு மாற்றலாகி சென்று உள்ளார்கள்..சில உதாரணம்
டாக்டர் ஜவஹர் --- தற்போது வாசுதேவநல்லூர்
டாக்டர் இத்ரீஸ் தம்மாம்
டாக்டர் கிஸார் நவாஸ் ஓமன்
டாக்டர் தம்பி திருநெல்வேலி
டாக்டர் முஹம்மது கிஸார் (நான் ) சென்னையில்
டாக்டர் மகபூப் சுபுஹாணி திருநெல்வேலி
இன்னும் பலர்.
ஆனால் இவர்களிலிருந்து ஒரு உண்மை தெரிகிறது.. இவர்களின் பொருளாதார மற்றும் சமூக வாழ்க்கை தரம் ஊரில் இருந்ததைவிட, வெளிஊர் சென்ற உடன் அதிகரித்து உள்ளது. இதை நம்மூரை மட்டம் தட்ட வேண்டும் என்ற ரீதியில் குறிப்பிட வில்லை.
அடிப்படை உண்மையை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். நமதூரில் இருந்தால், குடும்பத்துடன், மற்றும் சொந்த பந்தங்களுடன் வாழலாம். ஊரில் நல்லது கெட்டது என்றால் உடனே கலந்து கொள்ள முடியும்.
நாம் சம்பாதிக்கும் முன்பே இருந்த சொந்த வீடு. போன்ற எத்தனையோ நல்லவைகள் இருந்தும் மருத்துவர்கள், சொந்த ஊரை விட வெளியூர் அல்லது வெளிநாட்டை அதிகம் நாட காரணம் என்ன என்று அலசி பார்க்கும் போது கீழ்கண்டவற்றில் ஒன்றோ அல்லது பலதோ இருக்கலாம் என தோன்றுகிறது.
ஊரில் இருக்கும் போது, ஊர் மக்கள் தன் சேவையை பயன்படுத்த வில்லை அல்லது பயன்படுத்த மாட்டார்கள், இதனால் தன் அனுபவம் குறையலாம் என்று கருதலாம். ஊரில் தம்மை வைத்து கொண்டே, நெல்லை, தூத்துக்குடி, நாசரேத், நாகேர்கோயில் உள்ள டாக்டரை தேடி செல்வதால், தன் திறமை குறைந்து மருத்துவ அறிவின் மதிப்பு குறைவதாகவும் கருதலாம்.
பகல் நேரங்களில் மற்ற டாக்டர் மற்றும் மற்ற ஊர் டாக்டர்களை கலந்து ஆலோசித்து விட்டு , இரவில் அவசரத்திற்கு மட்டும் தங்களை பயன்படுத்தலாம். இதன் மூலம் தாம் கறிக்கு தேவைப்படும் கறிவேப்பிலை போல் பயன்படுத்தபட்டு ,தனது மருத்துவ திறமை குறைத்து மதிப்பிடுவதாக கருதலாம்.
இரவில் தன் தூக்கம் கெடுவதாக நினைக்கலாம்.(நோயாளிகளுக்கு ஒரு இரவு தான். ஆனால் இரவு நோயாளிகளை ATTEND பண்ணும் டாக்டர்களுக்கு தினம் இரவு விழிப்புதான்
வழக்கமாக மருத்துவ ஆலோசனை பெற மற்ற டாக்டர்களின் சேவையை பயன்படுத்தி விட்டு , அவசர காலத்திற்கு தன் சேவையை , வீட்டு விஜயம் என்னும் HOUSE விசிட் க்கு மட்டும் பயன்படுத்துவதால், தன் மருத்துவ திறமை குறைத்து மதிப்பிட ப்படுவதாக எண்ணலாம்.
இதனால் தனது வழக்கமான பணிகள் பாதிப்படைவதாக எண்ணலாம். ஊரில் அநேகர் தெரிந்த முகமாக இருப்பதால் இதை மறுக்க முடியாமல், மனமில்லாமல் வீட்டு விஜயம் போகலாம்.
மற்ற டாக்டர்களின் சேவையை பொதுவாக பயன்படுத்தி விட்டு, தன்னை வெறும் bp பார்க்க அல்லது மற்ற டாக்டர் எழுதி கொடுத்த ஊசி போட மட்டும் பயன்படுத்தலாம் என்ற பயம். இதனால் தான் குறைத்து மதிப்பிடப்படுவதாக எண்னலாம்.
தான் சேர்ந்த மருத்துவ துறை அல்லாமல், மற்ற துறைகளின் மருத்துவத்தையும் பார்க்கும் கட்டாயம் ஏற்படலாம், இதனால் அந்த துறையில் தான் இன்னும் அனுபவம், புகழ் பெறுவது பாதிக்கப்டலாம் என்ற எண்ணம். உதாரணம். குழந்தை மருத்துவரை, எல்லா நோயாளிகளையும் பார்க்க வைக்கும் பழக்கம்..
தமது சேவையும் பயன்படுத்தி விட்டு, தனது தொழில் சேர்த்து பட்ட பெயர் வைத்த கசப்பான அனுபவங்கள். சுடு மூஞ்சி டாக்டர், இரண்டு ஊசி டாக்டர்
தன்னுடன் அவசரத்திற்கு மருத்துவ ஆலோசனை பெற்று விட்டு, அவசரம் முடிந்த பிறகு பிற அல்லது வெளியூர் டாக்டரிடம் சென்று, தனது ஆலோசனைக்கு மேல் ஆலோசனை பெறுவதால், தான் அவமானப்படுவதாக எண்ணலாம் (டாக்டரே 2ND OPINION அனுப்பினால் அது வேறு )
தன் மருத்துவ அறிவை, காலத்திற்கு ஏற்ப வளர்த்து கொள்ள, அதிக மாநாடுகள், போன்றவற்றில் கலந்து கொள்ள வாய்ப்பு குறைவாக இருப்பதாக என்னலாம்.
எதிர்பாராவிதமாக் சில பக்க விளைவுகள் மருத்துவ சிகிச்சையின் போது ஏற்பட்டுவிட்டால், தன் மருத்துவ அனுபவங்களை குறைத்து தன்னை வஞ்சிக்கலம் அல்லது தண்டிக்கலாம் என்ற பயம்.
தான் ஊரில் கிளினிக் வைத்தால், வெளிநோயாளிகளை மட்டும் தான் பார்க்க முடியும், மருத்துவமனையில் தங்கி மருத்துவம் பெறும் INPATIENT என்னும் வாய்ப்பு தனக்கில்லாமல் போய் விடும் என்ற பயம் அல்லது அப்படி வாய்ப்பில்லாமல் போயிருக்கலாம் . அதனால் தன் மருத்துவ திறன் தடை பெறும் என்ற பயம்..
இது போன்ற காரணங்கள் இருக்கலாம் என்று பல மருத்துவர்கள் உணருவதாக எண்ணுகிறேன்.
இந்த குறைபாடுகளை களைந்து இனி வரும் இளம் மருத்துவர்களை நம்மூரில் தக்க வைத்து கொள்ள என்ன வழி உண்டு என்று உணர்வுபூர்வமாக உணர்ந்து,
நமதூர் எல்லா அவசர மருத்துவ சேவைகளையும் பெற வழி காண வேண்டும். இதை பற்றி வாசகர்களின் கருத்துகளை , எந்த தனி மனிதரையும் குறிப்பிடாமல் வரவேற்கிறேன்..
இன்ஷா அல்லா வரும் காலத்தில், இந்த குறையை எப்படி நிவர்த்தி செய்வது என்று பார்ப்போம்