கவிதை மேடை
கனவே கலையாதே கண்டதெல்லாம் காட்சியாகும் வரை
அனுப்பித்தந்தவர் : பெரிய நெசவு தெரு - சல்மா பர்ஸானா - ரியாத்
நாடுகள் என்ற கோடுகள் இல்லா ஓருலகம் கண்டேன்.
நீர்பறவைகளும், நிலப்பிறாணிகளும் நிலாவில் உலாவிடக் கண்டேன்.
மனிதத்ததையே புனிதமாக்கிய புதிய தலைமுறைக் கண்டேன்.
மதங்களைப்போற்றி மாற்றாரை மதிக்கும் மானிடரைக் கண்டேன்.
மரங்களும் மனங்களும் மனிதர்க்கு நிழல் தரக்கண்டேன்.
ஈரம் காயாத இதயங்கள் கண்டேன்.
ஈகை பேணிடும் இமயங்கள் கண்டேன்.
பணத்தையே பைத்தியமாக்கும் ஊழல் ஒளிந்ததைக் கண்டேன்.
பார்வைகளை பரித்துப்போன பிரதேச கலாச்சாரங்கள் அழியக் கண்டேன்.
வங்கிகளின் வாயுள்ள கால்நடைகளாய் இருந்த வர்கமொன்று
விடுதலையானதைக் கண்டேன்.
வணிகமில்லா வகுப்பறிவும் பகுத்தறிவும் பரவிடக் கண்டேன்.
வயிற்றிற்கும் வாயிற்கும் போராடியவர் வயிராறுவதைக் கண்டேன்.
சட்டமும் ஒழுங்கும் சமரசம் செய்யக் கண்டேன்.
நதிபோல் நீதியும் தூய்மையுறக் கண்டேன்.
குழாய்களில் குடிநீர் தித்திக்கக் கண்டேன்.
கிழிசல்களைத் தைக்கும் ஊசியாய் இளைஞர்களைக் கண்டேன்.
சோம்பலும் சுயநலமும் சோர்வடையக் கண்டேன்.
முற்றத்தில் ஆறும் ஆறுபதும் ஆடிப் பாடக் கண்டேன்.
பீடிகளும், பட்டாசுகளும் பிஞ்சுவிரல்களை வெறுக்கக் கண்டேன்.
மெய்களெல்லாம் மெருகேறக் கண்டேன்.
பொய்களெல்லாம் புரண்டோடக் கண்டேன்.
அரண்கள் அனைத்தும் அரங்கேறக் கண்டேன்.
அநியாயங்கள் அழிந்தொழிந்ததைக் கண்டேன்.
கண்டதெல்லாம் கனவோ என்ற ஐயம் எழவே
கண்விழித்தேன் தூக்கத்திலிருந்து.
( 08-01-2014 )