கவிதை மேடை
பார்புகழ் பாவலர்
கவிஞர் காயல் மு.பாரூக்
இறவாத கவிஇக்பால் புனைந்த பாக்கள்
இளைஞர்க்கு வழிகாட்டி உரத்தை ஊட்டும்!
மறவாது அன்னாரின் கவிதை எல்லாம்
மக்கள்தம் மனஏட்டில் ஒளிர்தல் காணீர்!
அறங்கூறும் ஆசானாம் அமரர் இக்பால்
அணிநாமம் அகிலத்தின் திசைகள் எல்லாம்
சிறந்தோங்க வழிசெய்ய இளைஞர் கூட்டம்
திரண்டெழுவீர் அவர்புகழை பரப்ப வாரீர்!
மறைதந்த இறையோனை ஐந்து நேரம்
மனத்தெண்ணி தொழுதேற்றி வணங்குங் காலை
குறைநீக்கி நிறைவாக்கி வளமார் வாழ்வை
கொடுத்துதுணை அருள்செய்வான் ஒப்பில் வல்லோன்.
இறைத்தூதர் எடுத்துரைத்த இந்த உண்மை
இக்பாலின் கவியமுதில் இருத்தல் காணீர்!
மறைநாம முஹம்மதுவின் பெயரைத் தாங்கும்
மாகவிஞர் புகழ்பரப்ப விரைந்து வாரீர்!
சொல்லினிலே துணிவிணைத்து கோழை நெஞ்சம்
சூளுரைத்து வீறுபெறும் வன்மை யூட்டி
நல்லவரின் திருக்கூட்டம் உலக மெங்கும்
நடைபோட நம்கவிஞர் வழிகள் கண்டார்.
பல்லாண்டு பார்புகழும் தொண்டு ஆற்றி
பயன்கொள்ளும் முறைசொல்லிச் சென்ற மேதை
அல்லாமா முஹம்மதிக்பால் செய்த சேவை
அவனிக்கு எடுத்துரைக்கும் பணிகள் செய்வோம்!
( 30-01-2014 )
1962 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட, இலட்சியக் கவிஞர் இக்பால் என்னும் மலரில், 269 ஆம் பக்கத்தில் இடம்பெற்றுள்ள இக்கவிதையை, நேயர்களுக்கு மகிழ்வுடன் வழங்கியுள்ளோம்.
இந்தியக் குடியரசின் முன்னாள் தலைவர் டாக்டர் ஜாஹிர் ஹுஸைன், மத்திய முன்னாள் அமைச்சர் மாண்புமிகு ஹுமாயூன் கபீர், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் போன்ற பெருமக்களின் வாழ்த்துச்செய்திகள் இடம்பெற்றுள்ள இம்மலரின் , முகப்பட்டை நீங்கலாக,
கிழிந்த நிலையில்,நம்கைக்குக் கிடைத்த இம்மலரை வெளியிட்ட, அமைப்பு பற்றித் தகவல் கிடைக்கவில்லை. அற்புதமான கவிதைகள் இடம்பெற்றுள்ள இம்மலரில், காயல் மு.பாரூக் என்ற பெயரில் , பார்புகழ் பாவலர் என்ற தலைப்பில் எழுதப்பட்ட முற்கண்ட கவிதையும் இடம்பெற்றுள்ளது.
பெயருக்கு முன்னால் , காயல் என வந்துள்ளதால், இவர் யாரென்று அறிய முயற்சித்தும் விடை கிடைக்கவில்லை. சிதிலமடைந்துள்ள நிலையில் கிடைத்துள்ள இவரது புகைப்படத்தைப் பார்த்து, தெரிந்தவர்கள் இவரைப்பற்றி கருத்துப் பதிவுப் பகுதியில் தெரிவிக்குமாறு வேண்டுகிறோம்.