கவிதை மேடை
நெருங்கினால் நிலவு நெருக்கினால் நெருப்பு
கவிஞர் செ.அ. நெய்னா
ஆட்டை மேய்க்க வந்தவனெல்லாம்
நாட்டைப் பற்றிப் பேசுகிறான்
கோட்டையை ஆண்ட பரம்பரையோ
கோட்டை விட்டுத் தவிக்கிறான்.
மாட்டை ஓட்டி வந்தவனெல்லாம்
மாநிலம் தனக்கெனப் பேசுகிறான்
நாட்டை ஆண்ட வாரிசெல்லாம்
நாதியற்று அலைகிறான்.
தேட்டை போட வந்தவனெல்லாம்
தேசம் பற்றிப் பேசுகிறான்
வீட்டை மறந்து விடுதலைக்காக
வாழ்வைத் தொலைத்தவன் வாடுகிறான்
மூட்டைக் கட்டியவனும்
முடிச்சை அவிழ்த்தவனும்
நாட்டைக் காக்க வந்தவனாம்
காட்டித் திருத்தி கழனியமைத்தவன்
காட்டிக் கொடுத்த எட்டப்பனாம்
அத்திப் பழத்தில் நெளிகின்ற
அற்பப் புழுக்களுக்கு
அரேபிய பேரிச்சையின்
அமுதம் புளிக்கத்தான் செய்யும்.
வெறி பிடித்த இரத்தக் காட்டேறிகளின்
கூர் பிடித்த சூலாயுதங்கள்
ருசி பார்க்கத் துடிக்கிறது.
இறை இல்ல இடிப்பிற்கு
கடப்பாறை ஏந்தியக் கரங்களில்
இன்று வளர்ந்து நிற்கிறது
நாதுராம் கொட்சேக்களின்
நஞ்சு தோய்த்த நகங்கள்.
மதியிழந்த மந்திகள்
மகிழம் பூவை(பாபர் மசூதி ) சிதைத்த போது
வல்லூறுக் கழுகுகள்
வண்ணப் புறாவைக் குதறிய போது
கவிஞன் ஒருவன் அழகுறக் கூறினான்
பாரத மாதாவின் முகத்தில் சில
துஷ்டப் பிள்ளைகள் துப்பிய
எச்சில் அபிஷேக மென்று.
ஒற்றுமையெனும் கயிறுகள்
ஒழுங்காகத் திரிக்கப் பட்டிருந்தால்
ஊளையிடும் ஓநாய்களே !
உங்களின் குரல்வளை
என்றோ நொறுக்கப்பட்டிருக்கும்.
பாரதி அன்றே சங்கொலித்தான்
பேய்கள் ஆட்சி செய்தால்
பிணம் தின்னும் சாத்திரங்களென்று.
நாட்டைக் காக்க வந்தவர்களே
எங்களைத் தாக்க வந்த பிறகுதான்
தெரிகிறது இது
புள்ளிமான் உருவில் வந்த
கொல்லும் புலிதான் என்று.
எங்கள்
உரிமைப் பயிர்களின் வேர்களில்
வென்னீரை ஊற்றும்
வேட்டை நாய்களே ! எங்களை
விரட்ட நினைக்காதீர்
விரண்டோடும் மான்கள் அல்ல நாங்கள்
வேங்கைகள் முன் விளையாட்டு வேண்டாம்.
இந்தியத் தாயின்
இதய மணி மாளிகையில்
சுடர் விட்டு எரிந்த
சூரியக் கதிர்கள் நாங்கள்.
ஆதாயங்களை நாடாது
ஆயுதங்களை ஏந்தாது
சமுதாய நலன் வாழ
இந்தத் தேசம் வாழ
வாழ்வின் வசந்தங்களை
தொலைத்தவர்கள் நாங்கள்.
எங்களை நீங்கள்
நெருங்கி வந்தால்
நிலவாய் ஒளிர்வோம்
நெருக்க நினைத்தால்
நெருப்பாய்ச் சுடுவோம்.
முத்தாய்ப்பாக கவிஞர்
மு. மேத்தா எழுதிய கவிதை இது
தேசமே ! என் தேசமே !
இந்தியா – என்றால் இந்தி-”யா” என்று
கேட்க வைத்த என் தேசமே !
இந்தியா என்றால்
இந்து “வா” என்று
கேட்க வைத்து விடாதே
என்று
கேட்டுக் கொள்கிறேன்.
( 19-11-2015 )