சிறுகதை
தாயன்பு – எம்.என். கதீஜா
காயல் கனெக்சன் நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற கதை
அன்று பள்ளியின் ஆண்டு விழா.பள்ளியின் சிறந்த ஆசிரியையாக இந்த வருடம் தேர்வு செய்யப்பட்டு மேடையில் அமர்ந்திருந்த ஆய்ஷாவிற்கோ மனம் வேறெங்கோ இருந்தது.அவள் பள்ளியில் சேர்ந்து ஆறு மாதங்களே ஆகின்றன.அதற்கு முன்னால் நடந்த நிகழ்வுகள் அவள் மனத்திரையில் ஓடியது கண்ணில் கண்ணீரோடு.
……..சிறிய வீடு,கணவன் ஒரே குழந்தை என்று வாழ்க்கை அழகாய் போய்கொண்டிருந்தது கணவனின் போதுமான வருமானத்தில்.ஆய்ஷாவும் அவள் கணவனும் தங்கள் மகன் முஜம்மில் நடக்க ஆரம்பித்த சில மாதங்களில் தான் அதை கவனித்தார்கள்.
அவனுக்கு காலில் ஒரு சிறிய குறை.வலது காலின் பாதம் ஒரு பக்கமாய் திரும்பியது போலிருக்கும்,சாதரனமாய் பார்த்தால் தெரியாது,உற்று கவனித்தால் மட்டுமே தெரியும் அளவிற்கு ஒரு சிறிய குறை.மருத்துவரிடம் தூக்கிக் கொண்டு ஓடினார்கள்.
பரிசோதித்துப் பார்த்த அவர்கள் இது பெரிய குறை ஒன்றுமில்லை என்றும்,சரி செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும்,இதனால் பெரிய பாதிப்பு ஏதுமில்லை என்றும் அறிவுறித்தினர்.கொஞ்சம் வேக நடை மட்டும் இயலாது மற்றபடி எல்லோரையும் போல சாதரணமாய் நடக்கலாம் என்று கூறினர்.
பயந்து போய் நின்ற அவர்களும் நிம்மதி பெருமூச்சு விட்டார்கள் தங்கள் குழந்தைக்கு ஒன்றும் இல்லை என்ற சந்தோஷத்தில்.இப்படி நாட்கள் சென்று கொண்டிருந்த நிலையில் தான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.
எப்பொழுதும் வழக்கமாய் முஜம்மிலின் பள்ளி பேருந்தை இயக்கும் ஓட்டுனர் அன்று வராத காரணத்தினால் வேரொரு ஓட்டுனர் குழந்தைகளை வீட்டில் இறக்கிவிட பேருந்தை ஓட்டினார்.
வழக்கமாய் முஜம்மில் இறங்கும் இடத்தை விட்டு கொஞ்சம் தூரத்தில் நிறுத்தினார், இதற்கு மேல் வாகனம் போகாது என்று மீதமிருந்த குழந்தைகளை கூறினார். முஜம்மிலினின் வீட்டுக்கோ சாலை கடந்து செல்ல வேண்டும். அவன் அந்த பரப்பரப்பான சாலையை மெதுவாய் கடக்க நேரிடும்போது எதிர்பாராத விதமாய் ஒரு வாகனம் அவன் மேல் மோதியது.அங்கேயே அந்த குழந்தையின் உயிரும் போனது.……..
கண்ணீர் வலிந்துக் கொண்டிருந்தது மேடையில் அமர்ந்திருந்த ஆய்ஷாவுக்கு தன் குழந்தையின் நியாபகத்தில்.தான் அணிந்திருந்த ஃபர்தா முக்காட்டின் ஓரத்தை வைத்து யாரும் பார்க்காத வண்ணம் தன் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
ஆனால் அவளும் அறியா வண்ணம் அவள் மாணவன் இப்ராஹிமின் நினைவு அவளை வருத்தத்தில் ஆழ்த்தியது.அவனுக்காக இறைவனிடம் கண்களை மூடிப் பிரார்தித்தாள். அந்த குழந்தை எப்படி இருக்கிறானோ என்று மனம் குழம்பிப் போய் அவனிட மே வந்து நின்றது.
………தன் குழந்தையை இழந்த வருத்தத்தில் இருந்த நேரம் அது.அவளால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.மிகுந்த சோகத்தில் இருந்தாள்.இறைவனை நோக்கி கையை உயர்த்தி 'யா அல்லஹ் நீ என் குழந்தையை உன்னிடத்தில் எடுத்துக் கொண்டாய், எனக்கு இதை ஏற்கும் சக்தியைக் கொடுத்து பொறுமையை கடைபிடிக்க வைப்பாயாக, நீ எனக்கு நல்லவற்றையே நாடிடுவாயாக'என்று பிரார்தித்தாள்.
சிலதொரு நாள் கழித்து ஆய்ஷா வீட்டி ற்கு வந்த, அடுத்த வீட்டு ஃபௌசியா பக்கத்துத் தெருவில் ஒரு பள்ளி இருக்கிறதே, அங்கே ஆசிரியை பற்றாக்குறையாம், அதனால் இரண்டொரு நாளில் அங்கே ஆசிரியை தெரிவு செய்கிறார்களாம் என்றாள்.
ஆய்ஷாவுக்குத் தான் தெரியுமே அந்த பள்ளிக் கூடத்தைப் பற்றி. ஆசிரியர்கள் சரியாக இல்லாத காரணத்தினால் தானே தன் குழந்தையை தூரத்தில் இருக்கும் பள்ளியில் சேர்த்து இப்பொழுது அவனை இழந்து விட்டும் நிற்கிறாள்.
மீண்டும் ஃபௌசியா தொடர்ந்தாள், குணத்திற்க்கு முதல் முக்கியத்துவம் கொடுக்கிறார்களாம் அங்கே நீ பட்டதாரி தானே! அதோடு சிறந்த குணமுடையவளும் கூட! நீ ஏன் அங்கே சென்று முயற்சிக்கக் கூடாது? உனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்குமே என்று கூறினாள்.
ஆனால் ஆய்ஷாவோ மறுத்து விட்டாள். தனக்கு அதில் எல்லாம் ஆர்வம் இல்லை என்றும், ஆசிரியர் வேலை எல்லாம் தனக்கு சரியாக வராது என்றும் தட்டிக் கழித்து விட்டாள். இச்செய்தியை அறிந்த அவள் கணவன் வற்புறுத்தியதால் அங்கே செல்ல சம்மதித்தாள்.
பள்ளியின் உள்ளே நுழைந்த அவளோ அங்கேயே ஸ்தம்பித்து போய் நின்றாள். அவளுக்குள் சந்தோஷம் ஊற்றாய் பாய்ந்தது. அங்கே ஓடி ஆடி விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளைப் பார்த்து அவளுக்கு ஏதோ ஒரு புது வித உணர்வு ஏற்பட்டது.
மறுபடியும் ஒரு தாயைப் போல் உணர்ந்தாள். தன் குழந்தையை இழந்த அந்தத் தாய் பக்கத்தில் இருந்த ஒருவரிடம் தலைமை ஆசிரியை அறை எங்கே என்று விசாரித்து அந்த அறையை நோக்கி நடந்தாள். தன் பெயரை அறைக்கு வெளியில் இருந்த புத்தகத்தில் பதிவு செய்தாள். அங்கிருந்தர்கள் சொன்னபடி. ஒவ்வொரு பெயராய் கூப்பிடப்பட்டது.
கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அவள் பெயர் கூப்பிடப்பட தலைமை ஆசிரியை அறைக்குள் நுழைந்தாள்.அங்கே சில கேள்விகள் கேட்டார்கள்,தெளிவாய் அனைத்திற்க்கும் பதில் கூறினாள்.
கடைசியாய் 'சம்பளம் பற்றி' என்று தொடங்கியவர்களை ஆய்ஷாவின் வார்த்தைகள் நிறுத்தின,"நான் இங்கே என் கணவனின் வற்புறுத்துதலால் மட்டுமே வந்தேன்
.ஆனால் இந்த பள்ளிக் கூடத்தில் நுழைந்த உடனே,இந்த குழந்தைகளை எல்லாம் பார்த்த நொடிப் பொழுதில் மீண்டும் ஒரு தாய் போல் உணர்ந்தேன்,
இந்த அனைத்து குழந்தைகளுக்கும் தாயாய் உணர்ந்தேன். இந்த மகிழ்ச்சியான உணர்வை ஏற்படுத்திய இந்த குழந்தைகளுடன் இருப்பதை எதனாலும் ஈடு செய்ய முடியாது" என்று அழகாய் தன் மனதில் பட்டதைக் கூறி முடித்தாள்.
அங்கிருந்த அந்த ஆசிரியர் குழுவிற்கும் இவளது இந்த பதில் மனதில் பிடிக்க, அவளை தெரிவும் செய்தார்கள்.
முதல் நாள் பள்ளிக்குள் ஆசிரியையாக காலடி எடுத்து வைத்தாள், ஒன்றாம் வகுப்புக்கு ஆசிரியை. வகுப்பறைக்குள் உள்ளே நுழைந்த அவளை அங்கே அமர்ந்திருந்த வாண்டுகள் விழிகளை அகல விரித்து புது விதமாய் நோக்கின,
புது ஆசிரியை என்பதாலோ என்னவோ.ஒவ்வொருவரின் பெயராய் அழகாய் விசாரித்து விட்டு குழந்தைகளுடன் இங்கிருக்கும் தருணத்தை நினைத்து, 'இறைவா! என்னுடைய துயரத்தை நீக்கி எனக்கு இந்த அழகிய தருணத்தை கொடுத்ததற்கு உனக்கே எல்லாப் புகழும்,
இதனால் எனக்கு நன்மையையே நாடிடுவாயாக' என்று பிரார்தித்தாள். இந்த குழந்தைகள் கேள்வி கேட்பதும்,விடைகள் கண்டுபிடித்து விட்ட சந்தோஷத்தில் அவர்களுடய சிரிப்பும் ஆய்ஷாவை வீட்டையே மறக்க வைத்தன.
வீட்டில் இருப்பதை விட பள்ளிக் கூடத்தில் இந்த குழந்தைகளுடன் இருப்பதையே அதிகமாய் விரும்பினாள். இப்படியே கிட்டத்தட்ட ஐந்தரை மாதங்கள் சுவாரஸ்யமாய் கழிந்தது.
அன்றொரு நாள், எப்பொழுதும் போல குழந்தைகளின் வருகைப் பதிவை குறித்துக் கொண்டிருந்தாள் ஆய்ஷா. இப்ராஹிம் என்ற மாணவனின் வருகையைக் குறிக்கும் போது அவன் நேற்றும், இன்றும் வரவில்லை என்பதை அறிந்து மாணவர்களிடம் விசாரித்தாள்.
அதற்கு ஒரு மாணவன் இப்ராஹிம் எங்கேயோ மாடிப் படியிலிருந்து கீழே விழுந்து விட்டானாம், ஆஸ்பிடல்ல இருகிறான், காலில் அடிச்சிருக்காம் என்றான். இதை கேட்டவுடன் இவளுக்கு திக்கென்று இருந்தது. அவனை போய்ப் பார்க்க வேண்டும் என்று மனம் ஒரு தாயாய் துடித்தது. பள்ளியில் அரை நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு அவனைப் பார்ப்பதற்காக ஆஸ்பிடலுக்கு ஓடினாள்.
உள்ளே விசாரித்து சென்றவள் இப்ராஹிமை காலில் கட்டுடன் படுத்திருப்பதை பார்த்தாள்.கண்களில் அவளை அறியாமலே நீர் சொட்டியது. அறைக்கு உள்ளே செல்கையில் அங்கே ஒரு வயதான பாட்டி மட்டும் அவனோடு இருந்தாள்.
குனிந்து அந்த குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு, அந்த பாட்டியிடம் தன்னை அறிமுகப்படுத்துவிட்டு ,'நீங்கள் இப்ராஹிமுடைய பாட்டியா?,இப்ராஹிம் எப்படி இருக்கிறான்,அவனுடைய ம்மா வாப்பா எங்கே விசாரித்தாள்.
பாட்டியோ அவனுக்கு ம்மா வாபா இல்லை என்றும்,அவள் தான் அவனைக் கவனித்துக் கொள்வதாகாவும் சொல்லிவிட்டு, இப்ராஹிமுக்கு காலில் பலத்த அடியாம்,ஆபரேஷன் செய்ய வேண்டுமாம், அப்பொழுது கூட பழைய நிலையில் அவன் நடக்க முடியுமா என்பது சந்தேகம் தானாம்,அவ்வளவு பணமும் எங்கிட்டே இல்லைமா என்று கண்களைத் துடைத்துக் கொண்டே கூறினாள்.
ஆய்ஷாவுக்கு அவளுடய மகன் நியாபகம் வந்தது, அவனுக்கும் காலில் தானே பிரச்சினை இருந்தது. உடனே வீட்டுக்கு ஓடினாள்.
அவள் கணவன் ஆய்ஷாவுக்கு அடிக்கடி ஏற்படும் வயிற்று வலிக்கு ஆபரேஷன் செய்வதர்க்காக சில ஆயிரங்களை சேர்த்து வைத்திருந்தான்.அதை கணவனுக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டு ஆஸ்பிடலுக்கு விரைந்தாள்.
பாட்டியிடம் அந்த பணத்தைக் கொடுத்து இதை வைத்து ஆபரேஷனை முடித்து விடுங்கள் என்று கூறிவிட்டு ஆபரேஷன் முடியும் வரை அவன் கூடவே இருந்தாள்.
சிகிச்சை முடிந்து வெளியில் வந்த மருத்துவர்கள் நாளை அவன் நன்றாக நடந்து விடுவான் என்று நம்பலாம் என்றனர். ஆய்ஷாவுக்கு சொல்ல முடியாத அளவுக்கு சந்தோசம்,
ஆனால் அவன் நன்றாய் நடந்து விடவேண்டுமே என்ற பயமும் இருந்தது. பாட்டி ஆய்ஷாவிடம் நீ காலையிலிருந்து இங்கே இருந்து விட்டாய்மா, இரவு நேரமாகி விட்டது,நீ வீட்டிற்க்கு கிளம்புமா என்றாள் அக்கரையுடன்.
இவளுக்கும் அலுப்பாகவே இருந்தது,நேரமாகி விட்டதால் கணவன் தேடக் கூடும் என்ற எண்ணத்தில் அவளும் ஒத்துக் கொண்டாள். அப்பொழுது தான் நாளை காலை சீக்கிரமாய் வருவதாய் ஆய்ஷா கூறினாள்.
ஆனால் பாட்டியோ இல்லையம்மா,' உங்கள் பள்ளியில் நாளை ஏதோ விழா என்று இப்ராஹிம் அன்று கூறினானே, நீ அங்கே போய் விட்டு நாளை வாமா, இல்லையென்றால் அங்கே அவர்கள் வருத்தப்படப்போகிறார்கள்' என்றாள்.
அப்பொழுது தான் ஆய்ஷாவுக்கு நியாபகம் வந்தது நாளை விழா இருப்பதும்,இவள் சிறந்த ஆசிரியையாக தெரிவு செய்யப்பட்டிருப்பதும்.அங்கே விடை பெற்றுக் கொண்டு விடா மனசுடன் சென்றாள்.
வீட்டில் படுக்கையில் அமர்ந்து இருகை ஏந்தி 'இறைவனே, என்னிடமிருந்து நீ என் குழந்தையை எடுத்துக் கொண்டாய். இந்த இப்ராஹிம் என்ற குழந்தைக்கு நீ ஆரோக்யத்தை கொடுத்து விடு, அவன் நன்றாக எழுந்து நடக்க சக்தியைக் கொடுத்து விடு 'என்றாள்……..
அடுத்த நாள் பள்ளிக்குச் சென்று மேடையில் அமர்ந்திருந்த அவளுக்கு இத்தனை நினைவுகளும் மனத்திரையில் ஓடியது. சிறந்த ஆசிரியை என்று இவளுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழா முடிந்ததும் உடை மாற்றி விட்டு இப்ராஹிமை பார்ர்கச் செல்வதற்காக வீட்டிற்குப் போனாள். வீட்டின் உள்ளே நுழைந்ததும் வயிற்று வலி அவளை பிடித்துக் கொண்டது. வயிற்றில் ஏதோ நீர்க்கட்டி இருப்பதாகவும், அதை எடுத்து விட்டால் வயிற்று வலி சரியாகி விடும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்திருந்தனர்.அடிக்கடி வரும் வலி தான். ஆனால் இன்று ரொம்பவும் கடினமாய் வலித்தது. சுருண்டு படுத்து கொண்டாள்.
வீட்டிர்க்கு வந்த ஆய்ஷா வலியில் துடித்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனான் அவள் கணவன். ஆட்டோவை கூப்பிட்டு ஒரு கையில் ஆய்ஷாவைப் பிடித்துக் கொண்டு இன்னொரு கையால் அலமாரியில் ஆய்ஷாவின் சிகிச்சைக்காக சேர்த்து வைத்திருந்த சில ஆயிரம் ரூபாயை மணிப்பைய்யுடன் எடுத்துக் கொண்டு ஆஸ்பிடலுக்கு ஓடினான்.
பாவம் அவனுக்குத் தெரியாது அந்த மணிபைய்யில் ஒரு ரூபாயும் இல்லை என்பது.அதைத் தான் ஆய்ஷா இப்ராஹிமின் சிகிச்சைக்காக கொடுத்து விட்டாளே! அவளை ஸ்ரெட்ச்செரில் அமரவைத்து மருத்துவமனை உள்ளே கொண்டு செல்கையில் ஆய்ஷா இப்ராஹிமைப் பார்த்தாள். அழகாய் அவன் பாட்டியுடன் நடந்து போய் கொண்டிருந்தான். துடி துடித்துக் கொண்டிருந்த அந்த தாயின் கண்களில் ஆனந்த கண்ணீர் சொட்டியது, இதயம் முழுக்க சந்தோஷம் நிரம்பியது,முகம் மலர்ந்தது தன் வலியினூடே.
முற்றும்.
( 09-02-2013 )