சிறுகதை


தாயன்பு

இணையதளஎழுத்தாளர்: . லெப்பைசாகிபு என்ற.எல்.எஸ். இப்னு அப்பாஸ்

காயல்கனெக்சன் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கதை
 

துபாயிலுள்ள நோக்கியா பிரான்ஸ் கம்பெனியில் உயர் இன்ஜினியர் பதவி வேலை செய்யும் அப்துர்ரஹ்மான் கைநிறைய சம்பாத்தியம், ஊரிலிருக்கும் அவர் மனைவி அரபா அடிக்கடி போன் செய்து, மாமி, மச்சிமார்களை குறைக்கண்டு பசாது பேசி வருவது வழக்கம்.

அதுபோல டிசம்பர் 6-ல் பாபர் மசூதி இடிப்பு தினவிடுமுறையில் துபாயிக்கு போன் போட்டு ஏதேதோ குறைகளை மாமி வீட்டைப் பற்றி அடுக்கினால்.....!

துபாய் எதிர்முனையில் இருந்த கைபேசி அலையில்...இதோ பாரு என் உம்மா வீட்டை பற்றி நீ என்ன சொன்னாலும் அது என் காதில் விழாது. என் தாயின் அன்பு உனக்குத் தெரியாது. அவர்கள் என்னை வளர்த்து படிக்க வைத்த கஷ்டம் உனக்கு எங்கே புரியப் போகிறது?


அவங்க தினமும் குடும்பச் செலவை ஓட்ட மசாலா தூள் வருப்பாங்க, மாவு வருத்து கொடுப்பாங்க, என் அக்கா, தங்கை சீனிமாவு, சீப்பணியாரம், பட்டர் பிஸ்கட் செய்து தம்பி மூலம் விற்று என்னைப் படிக்க வைத்தாங்க.

அவர்கள் வாழ்நாள் பூராவும் சிந்திய வேர்வை முழுவதும் இரத்தம் தான் தெரிஞ்சிக்கோ. அவங்க தாயன்பு, பாசம் எனக்கு மறக்காது புரிஞ்சுக்கோ என்றான் அவன்!.


நான் சொல்றதை கேளுங்க.... என்று இழுத்த போது!
 

நிறுத்துடி....உன்னைப் பற்றி, உங்களைப் பற்றி ஒருநாளும் உன் மச்சியும், என் உம்மாவும் எந்த குறையும் சொன்னதில்லை.. நீ ஏன் எங்க குடும்பத்தைப் பற்றியே சதா பசாத் (குறை) சொல்லி......காலத்தை வீணாக்குறே....ஏன்?


இல்லைங்க....உங்க லாத்தா சொன்னதா பஸாது மாமி சொன்னாங்க. இந்த பாரு அவங்க பட்டமே பஸாது மாமி..... இனி அவங்க சொல்லிலே உண்மை இருக்குமா? ஏன் எண்ணிப் பார்க்க மாட்டேன்கிறீங்க? போனை வைடி....

கோபமாக கத்தினான் அப்துர்ரஹ்மான். மனுஷனை வேலை செய்ய விடாதீங்க! போனை எடுத்தா நல்லதை பேச பழகுங்க. யார் வீட்டையும் அள்ளி வைக்காதீங்க. அதை நம்ப நான் தயாராக இல்லை!.

இல்லைங்க என்று அரபா இழுத்தாள்...

போனை மணிக்கணக்காகப் பேசி பணத்தை வீணாக்காதே. வை...வை.. அப்போது அடுப்படியிலிருந்து குக்கர் விசில் சப்தம் கேட்க அங்கு நுழைந்தாள்.

அப்போது பஸாத் மாமி வீட்டுக்குள் நுழைந்து, அழைக்காமலே சோபாவில் அமர்ந்தாள். வாங்க மாமி...என்ன இவ்வளவு தூரம்?

அரபா நான் கண் ஆபரேஷன் செய்ய போக போகிறேன். பத்தாயிரம் தேவை மீதி நான் ரெடி பண்ணிட்டேன்! என்றாள்.

இப்போது என்னிடம் அவ்வளவு தொகை இல்லை. ஒரு வருடத்திற்கு முன் வாங்கிய இருபதாயிரம் ரூபாய் திருப்பித் தரலையே! அதை எப்போது மாமி தரப்போறீங்க? அதற்கு பதிலாக ஒரு பவுன் பிரைஸ்லெட் தந்திருக்கேனே! இப்போ அதுபோல தர தங்கபொருள்கள் இல்லை என்றால் பசாத் மாமி!

அவங்களுக்கு தெரியாம பணம் தந்தேன். அவங்க ஒரு அவசர வேலையாக ஊர் வருவதாக கேள்வி. பணம் எனக்கு தேவைப்படுகிறதால் பிரைஸ்லெட்டை விற்று, என் பணத்தை எடுத்துக்கொண்டு உங்கள் பணத்தை தந்து விடுகிறேன் என்றாள் அரபா.

அந்த பிரைஸ்லைட் யாருடையது என்று எனக்கு ஞாபகமில்லை. எழுதி வைக்க படிப்பறிவுமில்லை. உம்மா வீட்டை விட்டு மாப்பிள்ளைகளை பிரித்து வைக்கிறதால் சிலர் பணமும், கேட்டா மோதிரம், காப்புனு தருவாங்க. திருப்பிக் கொடுப்பதும் உண்டு. மறந்திட்டா நான் யாரைப் போய் கேட்க? அப்படியே விட்டுடுவேன்.

உன் மாப்பிள்ளையை களைத்து பார்த்தியா? பய வளைந்துக் கொடுக்கிறாரானா?

எங்க மாமி கேட்கிறாங்க? உம்மா வீடு, லாத்தா, தங்கை மீது அவ்வளவு பாசம் வைச்சி இருக்காங்க என்றாள்; அரபா. அலுப்பாக, அப்படி சொல்லு மார்க்க வழியில் வளர்ந்த பிள்ளை. பாசங்களை சுலபத்தில் பிரிக்க முடியாது. இப்படிபட்டவர்களை இறையருள் சூழ்ந்திருக்கும் என்றால் பசாத் மாமி. சரியாக சொன்னீங்க மாமி. தனது கஷ்டகாலங்களை அடிக்கடி நினைத்து பார்க்கிறாங்க. உம்மா வீட்டிலும் பாசம் தாயின் மீதும் அன்பு. தந்தை, மாமா, மாமி என்றும் பாசம் காட்டும் மனிதர் அவங்க. சில நேரம் அவங்க குடும்ப வளர்ப்பு பற்றி நான் மனசுக்குள் பெருமைக் கொள்வேன். உங்களால் தான் அவங்களை நான் குழப்புகிறேன் என்றாள் அரபா.

தாய்வீட்டை பிரிஞ்சியிருந்தா உனக்கு எல்லாம் கொட்டுவான். அதன்பின் நீ கேட்டதை எல்லாம் உனக்கு தருவான்.

எனக்கு பணம் இல்லைன்னா...! உனக்கு என்ன பண கஷ்டமா அரபா! அப்படினா வட்டிக்கு எடுத்து தாரேன். உன் காப்பைத் தாயேன்.

இந்த பாருங்க, வட்டிக்கு வாங்குற ஹராமான பழக்கம் எனக்கு இல்லை. உங்களோடு அதை வைத்துக் கொள்ளுங்க. நேரம் ஆகுது, இருந்த இடம் சூடு ஏறிப்போச்சு போங்க....போங்க என்று பசாது மாமியை அரபா துரத்தி விட்டா.

இந்தா பாரு அரபா இதெல்லாம் நல்லா இல்லை. நீ இல்லாவிட்டால் எங்க அக்பர் சாச்சா கேட்டா எவ்வளவு பணம் வேணும் தர ரெடியாக இருக்காங்க. நான் போயிட்டு வாரேன். அவங்க தான் எனக்கு கை கொடுக்கும் மனுஷன்!.

மீண்டும் வராதீங்க, எந்த பணக்காரங்களை பார்த்தாலும் சாச்சா, மாமா, காக்கா போடுவது உன் வழக்கம்.

எங்கிருந்தோ வந்து இங்குகுடியேறி ஊரையே என்சொந்தம் என்று கூறுகிறே. சூனியம், மந்திரம் செய்றவங்களோட உன்தொடர்பை நான் இனி கட் பண்ணிக் கொள்கிறேன் போங்க...போங்க...வரவேண்டாம்!

வர்ரேன.; பணம் வந்துட்டு நாலுகாசு பார்த்ததும் நேற்றைய வாழ்க்கை மறந்து போச்சா அரபா. நீ பேசுறே... உன்னையே சூனியமாக்கி நடக்கவிடாமே ஆக்கிடுவேன் பாரு. இந்த பாருங்க மாமி, மிரட்டல் எல்லாம் வேணாம். நான் ஐந்துவேளை தொழுகிறேன். குர்ஆனை தினமும் ஐந்துவேளை ஓதி வருவதால் உன் ஜின்ஷைத்தான் சூனியம் என்னை ஒன்று பண்ணாது. அல்லாஹ் எங்களுடன் இருக்கான்...இதற்குமேல் ஒரு நிமிஷம் இருந்தால் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளிடுவேன்....போங்க....போங்க...என்றாள் கோபத்துடன். திரும்பி...திரும்பி...பார்த்து வாயிக்குள் ஏதோ முனுமுனுத்து கொண்டு வெளியேறினாள் மாமி.

ஒருவாரம் கழித்து.....துபாயிலிருந்து அப்துர்ரஹ்மான், தாய் ராவியத்து வீட்டுக்கு போன் செய்தான். உம்மாவை கூப்பிடு ஷர்மி என்றான்.

....உம்மா லுஹா தொழ ஆரம்பிச்சாட்டாங்க இன்னும் இருபது நிமிஷம் கழித்து தான் அவர்களுடன் நீ பேசமுடியும் என்றால் ஷர்மி.

ஷர்மி நீ காலேஜிக்கு போறீயா? உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டான். மினிலேப்டாப் வேணும் என்று சொன்னா...

நீ கேட்காமலே வாங்கி என் கூட்டாளி ஊர் வருகிறான் அவனிடம் கொடுத்து அனுப்பி உள்ளேன்.

ஒரு காலத்தில் நான் பிளஸ்டூ படிக்க, காயல்பட்டணம் ஆறுமுகநேரி உயர்நிலைப்பள்ளியில் நம்ம ஊரிலிருந்து நடந்து போய் படித்துவிட்டு மாலையில் வந்ததும், எனது கால்வலிக்காக கோடாரி தைலம் தேய்த்து சுடுநீர் ஓத்தனம் தினமும் தருவியே. அதை நான் எப்போதும் மறக்க மாட்டேன். உன் தங்கை ஹவ்வா ஆக்கிலா க்ரெண்ட் இல்லாவிட்டால் இரவில் நான் படிக்க ஓலைவிசிறியால் எனக்கு வீசிக் கொண்டிருப்பதையெல்லாம் நினைத்து பார்க்கிறேன்.

நம் உம்மா இரத்தவேர்வை சிந்தி என்னை காலேஜ் வரைக்கும் படிக்க வைத்தாங்க. நானோ மெரிட் பாஸாகி வந்து வேலையும் கிடைச்சிருக்கு. நமது உம்மாவின் தாயன்பு போல யாரு செய்திருப்பார்கள்? ஒரு நிமிடம் கூட மறக்க முடியலே என்றான் அப்துர்ரஹ்மான்.

அதற்குள் இருபத்துஐந்து நிமிடம் ஓடி மறையவே... செல்போனை சல்லாபாயில் இருக்கும் உம்மாவிடம் ஷர்மி கொடுத்தாள்...!

வாப்பா, என் செல்லமே, நீ சுகமாக இருக்கிறாயா? என்றவாறு முதலாவதாக ஸலாம் கூறியபின், ஏண்டா போய் இரண்டுவருடம் ஆச்சே, ஊர் வரக் கூடாதா?

இல்லைமா.. இன்னும் ஒருவாரத்தில் எங்கள் கம்பெனி சார்பில் பிரான்ஸ் நாட்டுக்கு போறேன். அங்கு ஒரு வருடம் பணி செய்துவிட்டு ஊர் வருகிறேன். சம்பளமும் கூடுது. நான்கைந்து வீடு கட்டணும். கடுமையாக உழைக்கணும். இரவு பகலாக ஓடி வேலையும் செய்யணும் என்று இருக்கேன் என்றான்.

ஏம்மா... நான்கு அல்லது ஐந்து எதற்கு வாடகைக்கு கொடுக்கப் போறீயா? சரியா போச்சுமா, நம்ம சர்மிக்கு ஒரு வீடு கே.எம்.டி நிலத்தில், ஹவ்வா ஆக்கிலாவுக்கு ஜெய்லானி காலனி அருகில் உள்ள நிலத்தில் வீடு எனது வீட்டை என் பெஞ்சாதியின் தங்கைக்கு வீடு இல்லாததால் கொடுக்கப் போறேன்.

எனக்கு அங்கேயே நிலம் வாங்கி போட்டுள்ளேன். உங்களுக்கு ஒரு சிறிய வீடு, என் மாமா மாமிக்கு சிறிய வீடு கட்டப்போறேன். பேங்க் மூலம் பணம் அனுப்புறேன். பால்மேஸ்திரி அண்ணாச்சி இடமும் எஸ்டிமேட் வாங்கி வந்திருக்கேன்.

எந்த பணமும் அனுப்பினாலும் பி.காம் படிக்கும் ஷர்மியை கொண்டு கணக்குபில் எல்லாம் எழுதி வைக்க சொல்லுங்க. நம்ம ஊர் பஞ்சாயத்து ஊர் அல்ல, நகராட்சி ஆகிட்டதால் வீடு கட்டிய கணக்கை சரியாக வைத்து ஆடிட்டர் மூலம் கணக்கு ஒழுங்குபடுத்தி கொண்டால் பின்னால் இன்கம்டெக்ஸ் பிராப்ளம் வராது. எனது உழைப்பில் எந்த கள்ளக்கணக்கும் இருக்கக் கூடாது... சரிதானம்மா என்றான் அப்துர்ரஹ்மான்.

நல்லது செய்தால் நல்லபடி நிம்மதியாக வாழலாம்னு உன் வாப்பா சொல்வதை நீ நடத்தி காட்டுறே நல்லதுதான் என்றாள் ராவியத்தும்மா.

ஒரு செய்தி சொல்ல மறந்துட்டேன் பசாது மாமியை நம்ம வீட்டு பக்கம் வரவிடாதீங்க – நம்மளைப் பற்றி இல்லாதது பொல்லாததை என் மாமி வீட்டில் போய் சொல்லியிருக்கா. பொதுவா ஒரு வீட்டு செய்தியை சொல்ல யார் வந்தாலும் நம்மலை பற்றி நாம் பேசாத ஒன்றை இன்னொரு வீட்டில் போய் சொல்லி பலாய் இழுப்பாங்க. நாம பட்ட கஷ்டம் உங்களுடைய தளராத உழைப்பு யாருக்குத் தெரியும்?

உண்மைதான் மகனே... நான் யார் வீட்டு செய்தியை இங்குவந்து சொன்னாலும் நம்புவதில்லை. இந்த பசாத் மாமி மூடுவதும் முழிப்பதும் பொய்...பொய்தான்.. எல்லா வீட்டிலும் தெரிஞ்சிட்டாங்க நானும் வராதே என்று சொல்லிடுறேன். அதோடு போன் கட் ஆனது.

ஏழு மாதம் கழித்து பால் மேஸ்திரி ராவியத்தும்மா வீட்டுக்கு வந்தார். அம்மா நம்ம தம்பி ரஹ்மான் மனசுபோல ஒரே சமயத்தில் மூன்று இடத்திலும் ஐந்து வீடு வேகமாக கட்டி முடிச்சிட்டோம். ஐந்து வீடுகளுக்கும் தரை டைல்ஸ் உள்வெளி பக்கம் பெயிண்ட் அடிக்கணும், பைப்பு லைன் போடணும் எலக்ட்ரிக் வேலை பாக்கி உள்ளது. அதையும் என்னிடம் தரச் சொல்லுங்க என்றான் மேஸ்திரி. இல்லே மேஸ்திரி...அதை எங்களுரில் கடை வைத்திருக்கும் கடையில் டைல்ஸ்களையும் பெயிண்ட்களையும் வாங்கச் சொல்லி இருக்கான்.

பெயிண்டரும் எங்கள் பகுதி பிள்ளைகளுக்கு கொடுக்கணும். பிளமிங் பைப் லைன்களையும் எலக்ட்ரிக் வேலைகளையும் உள்ளுர் பிள்ளைகளுக்குத் தான் கொடுக்க சொல்லிவிட்டு போயிருக்கான். மேஸ்திரி நீங்க வீடு கட்டுறீங்க, அது உங்களுக்கு சம்பாத்தியம், எங்க ஊர் பிள்ளைகளுக்கு வேலை வாய்ப்பு கொடுக்கணும் இல்லே> அதைத் தான் தம்பி சொல்லுது.

சரிதான் அம்மா, தம்பி மனம் போல எல்லாம் நடக்கும். தம்பி எப்போ வருது? மேஸ்திரி கேட்டான்.

இன்னும் ஐந்து மாதத்தில் வீட்டில் அத்தனை வேலைகளையும் முடிச்சிட்டு போன் போட்டா வருவதாக சொன்னான்.

ஐந்து மாதம் கழித்தது. எப்போதும் போல, அப்துர் ரஹ்மான் பிரான்ஸில் இருந்து தாய் வீட்டில் வந்து இறங்கினான்.

பசாத்மாமி குசலம் விசாரிக்க வீட்டில் நுழைந்தார்கள். தம்பி நல்லா சுகமாக இருக்கிறீங்களா?....என்று கேட்டவாறு உள்ளே முதல் ஆளாக வந்தாங்க... வாங்க மாமி....பசாத் வேலை எப்படி இருக்கு குத்தலாக கேட்டான்.... அதையெல்லாம் விட்டுவிட்டேன். ஒரு கண் ஆப்ரேஷன் போனேன். அதை சரிசெய்ய முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக பார்வை போய்விடும் என்று டாக்டர் சொல்லிட்டாரு.

ஒரு கணவனுக்கு கண் பார்வை எடுக்க வைத்தது – எனக்கு மாறி வைச்சிட்டான் மாந்திரிகர் தன் வினை தன்னைச்சுடும் என்பது போல எனக்கு நடந்துவிட்டதால். என் ஒரு கண்ணை இழந்தபோது தான் பிறருக்கு செய்யும் தீங்கை அறிந்துகொண்டு, திருந்திவிட்டேன்.

உங்கள் தாயன்பு ஆழமானது எப்படியும் அசைந்து கொடுக்காமல், கல் போல நின்று விட்டீங்களே, உங்க மனைவி அரபா மீது தப்பு இல்லை. நான் தான் அவளை கெடுக்க உங்களை வெறுக்க நாடகம் போட்டேன்.

ஒன்றுமே நடக்கல. உங்க உம்மா மாமி, உங்க மனைவியெல்லாம் நல்லவங்க. நான் தான் கெட்ட ஜென்மம். இப்போ திருந்திட்டேன். அழுதுகொண்டே பசாத் மாமி கூறினாங்க!

மாமி, தவறு ஏற்படுவது சகஜம். தவறை திரும்ப திரும்ப செய்வது தான் தப்பு. திருந்தி விட்டீங்க. ஆகவே போதும். வந்தும் நல்ல செய்தியைத் தந்தீங்க மாமி. பசாத் மாமி மௌனமானார்கள்.

தாயன்பு இல்லங்கள்; ஐந்தும் ஒரே நாளில் ஐந்து வக்துகளில் திறக்கப்பட்டது. உம்மா உங்கள் வீட்டு சாவி இது, மாமி உங்களுக்கான வீட்டுச்சாவி இது. என் வீட்டை என் உம்மாவும், நீங்களும் சேர்ந்தே திறக்க வேண்டும் இருவரும் என் தாய்தான். மாமியும் தாய்தானே என்று அப்துர்ரஹ்மான் கூறி, தாய் இல்லச் சாவியை ஒரு தட்டில் வைத்து தந்தான்.

மருமகனே...உங்களின் தங்கமான குணத்துக்கு ஒரு குறையும் வராது. தாயின் மீது உங்கள் அன்பு இருக்கிறதே அது உலகம் அழியும்வரை அழியாது. தாயன்பின் இல்லங்கள் பெயர் மிகவும் பொருத்தம் மருமகனே!.

ஊரில் வீடு வாங்கி இருக்கும் ஆண்கள் எல்லோரும் தனது உழைப்பால் ஒரு வீட்டைக்கட்டி கொண்டு, மனைவியின் தங்கைக்கு உங்கள் போல வீட்டைக் கொடுத்தால் இனி வீட்டின் சுமை மாறிவிடும். எல்லா பெண்களுக்கும் நிம்மதியும் கிடைக்குமே! ஒரே சமயத்தில் எல்லோரும் குதூகலமாக சிரித்து மகிழ்ந்தனர். மகனின் தாயன்பு இல்லத்தில்!


முற்றும்.

( 14-02-2013 )